Dark Mode
Breaking News
  • Sunday, 18 October 2026 Sunday,
    18 October 2026
பயன்பாடில்லாத இடத்தில் சாலை; மனு அளித்த சமூக ஆர்வலர் கார் ஏற்றிக் கொலை - பேரூராட்சித் தலைவர் கைது!

பயன்பாடில்லாத இடத்தில் சாலை; மனு அளித்த சமூக ஆர்வலர் கார் ஏற்றிக் கொலை - பேரூராட்சித் தலைவர் கைது!

Place: திருப்பூர்

Reporter Name: Eye Media

175 0
PHNjcmlwdCBhc3luYyBzcmM9Imh0dHBzOi8vcGFnZWFkMi5nb29nbGVzeW5kaWNhdGlvbi5jb20vcGFnZWFkL2pzL2Fkc2J5Z29vZ2xlLmpzP2NsaWVudD1jYS1wdWItMzgyNDE2ODE4NzgyMTcxNSIKICAgICBjcm9zc29yaWdpbj0iYW5vbnltb3VzIj48L3NjcmlwdD4=

பயன்பாடில்லாத இடத்தில் சாலை; மனு அளித்த சமூக ஆர்வலர் கார் ஏற்றிக் கொலை - பேரூராட்சித் தலைவர் கைது!
************************************

திருப்பூர் மாவட்டம், சாமளாபுரம் கருகம்பாளையத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி (57). சமூக ஆர்வலரான இவர், அப்பகுதியில் உள்ள தேநீர்க் கடைக்கு புதன்கிழமை மாலை தனது இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். சாமளாபுரம்-காரணம்பேட்டை சாலையில் கருகம்பாளையம் அரசுத் தொடக்கப் பள்ளி அருகே வந்தபோது, அவருக்குப் பின்னால் வந்த கார் ஒன்று, பழனிசாமியின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த பழனிசாமி அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். பழனிசாமி மீது காரை மோதி விபத்தை ஏற்படுத்தியவர், காரை நிறுத்தாமல் சென்றது குறித்து மங்களம் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

அப்பகுதியில் இருந்தவர்களிடம், அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து நடத்திய விசாரணையில், விபத்தை ஏற்படுத்திவிட்டு, தப்பிச் சென்றது திமுக-வைச் சேர்ந்த சாமளாபுரம் பேரூராட்சித் தலைவரான பழனிசாமி (60) என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அவரைப் பிடித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டதில், அவர் மது போதையில் விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது. இந்நிலையில் அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக உயிரிழந்த பழனிசாமியின் உறவினர்கள் குற்றம் சாட்டிய நிலையில், போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அதில், முன்விரோதம் காரணமாக இருசக்கர வாகனத்தின் மீது, காரை ஏற்றி பழனிசாமியை, சாமளாபுரம் பேரூராட்சித் தலைவர் பழனிசாமி கொலை செய்தது கண்டறியப்பட்டது. இது தொடர்பாக மங்கலம் போலீஸார் கூறுகையில், “விபத்தில் இறந்த பழனிசாமி சாமளாபுரம் பேரூராட்சிப் பகுதியில் மக்களுக்குப் பயன்பாடில்லாத தனியார் இடத்தில் போடப்பட்ட சாலை தொடர்பாக, திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்திருந்தார். இதனால், அந்தப் பணி நிறுத்தப்பட்டது.

இதுதொடர்பாக சமூக ஆர்வலர் பழனிசாமிக்கும், பேரூராட்சித் தலைவர் பழனிசாமிக்கும் இடையே கடந்த சில நாள்களுக்கு முன்பு பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால், சமூக ஆர்வலர் பழனிசாமி மீது பேரூராட்சித் தலைவர் பழனிசாமி கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார். இந்நிலையில், புதன்கிழமை மாலை மது போதையில் காரை பேரூராட்சித் தலைவர் பழனிசாமி ஓட்டி வந்துள்ளார். அப்போது, தனக்கு முன்னால், இருசக்கர வாகனத்தில் சமூக ஆர்வலர் பழனிசாமி இருசக்கர வாகனத்தில் செல்வதை அறிந்து அதிவேகமாக வந்து அவர் மீது காரை ஏற்றிக் கொலை செய்துள்ளார். அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்" என்றனர். பேரூராட்சித் தலைவரான பழனிசாமி, தொடக்க காலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்துள்ளார். கடந்த முறை பேரூராட்சித் தேர்தலில் போட்டியிட மார்க்சிஸ்ட் கட்சியில் வாய்ப்பு அளிக்கவில்லை. இதனால், சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்ற பின், திமுக-வில் இணைந்து பேரூராட்சித் தலைவர் பதவியைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

Comment / Reply From

Newsletter

Subscribe to our mailing list to get the new updates!

Editor Page

spirituality